Monday, 11 August 2014

காமன்வெல்த்போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–
காமன்வெல்த்போட்டியில் வென்ற தமிழக வீரர்–வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை: ஜெயலலிதா வழங்கினார்
                                                                                                                                                                                                                                                                       

பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகை வழங்கிட முதல்–அமைச்சர் ஜெயலலிதா 19.12.2011 அன்று ஆணையிட்டிருந்தார். இதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கான ஊக்கத்தொகை 20 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாகவும்; வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாயிலிருந்து 30 லட்சம் ரூபாயாகவும்; வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் 23.7.2014 முதல் 3.8.2014 வரை 20–வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடந்தது. இதில் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ உடல் எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றதோடு, புதிய சாதனையும் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த எஸ். சதீஷ்குமார், ஸ்குவாஷ் மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லிகல் ஆகிய மூன்று வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை;

மேசைப்பந்து (டேபிள் டென்னிஸ்) ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த அச்சந்தா ஷரத் கமல் மற்றும் அந்தோணி அமல்ராஜ், ஆடவர் ஹாக்கி போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ரூபிந்தர் பால் சிங் மற்றும் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரன் ஆகிய நான்கு வீரர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகை; என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை 7 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல்– அமைச்சர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கி பாராட்டினார்.

முதல் – அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து ஊக்கத் தொகையினைப் பெற்றுக் கொண்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், தங்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் உயரிய ஊக்கத் தொகை வழங்கி பாராட்டியமைக்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டு, முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது, முதல்– அமைச்சர் ஜெயலலிதா ‘‘வாழ்த்துக்கள். நாங்கள் உங்கள் வெற்றியைக் கண்டு பெருமைப்படுகிறோம். எதிர்காலத்தில் இன்னும் நிறைய வெற்றியை நீங்கள் அடையவேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பாராட்டும் தெரிவித்தார்.

தங்களால் தமிழ்நாடும், இந்தியாவும் பெருமை பெற்றதாக தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசீமுத்தின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மைச் செயலாளர், உறுப்பினர் செயலாளர் ஜெயக்கொடி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment