திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதால், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும் 502 தங்க, வைர ஆபரணங்கள் சுத்தம் செய்து, மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 26–ந் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 4–ந் தேதி வரை (9 நாட்கள்) நடக்க உள்ளது. விழாவையொட்டி தினமும் காலையிலும், இரவிலும் ஒவ்வொரு வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிகள் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.
வாகன ஊர்வலத்தின் முன்னால் கோலாட்டம், மயிலாட்டம், இசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
தினமும் நடக்கும் வாகன வீதி உலாவின்போது உற்சவ மூர்த்திகளுக்கு தங்க, வைர ஆபரணங்களால் அலங்கரிப்பார்கள். மூலவருக்கு 120 ஆபரணங்களும், உற்சவ மூர்த்திகளுக்கு 382 ஆபரணங்களும் அணிவித்து அலங்காரம் செய்யப்படும்.
இந்த ஆபரணங்கள் பிரம்மோற்சவ விழா நாட்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, பின்னர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த ஆபரணங்களை சுத்தம் செய்து மெருகேற்றும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த பணியில் தமிழ்நாட்டை சேர்ந்த பலர் ஈடுபட்டுள்ளனர்.
அதில், 32 கிலோ எடையிலான அஷ்டோத்ர சத்தியநாம ஆரம், அதேபோல் 32 கிலோ எடையிலான சகஸ்ர நாம ஆரம் ஆகியவை முக்கியமானதாகும். இந்த ஆபரணங்கள் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருடசேவை அன்று உற்சவர் மலையப்பசாமிக்கு அணிவிக்கப்படும்.
மேலும் மூலவருக்கு வைர கிரீடம், வைர சங்கு, சக்கரம், ரத்தின கிரீடம், பச்சை வைரத்தால் தயாரிக்கப்பட்ட சங்கு, சக்கரம், வைர கடபத்திரம், வைகுண்ட அஸ்தம், 7 கிலோ எடையிலான வைர மகர கண்டி, தங்க பட்டு வஸ்திரம் ஆகியவைகளும் சுத்தம் செய்யப்பட்டு, மெருகேற்றப்படுகிறது என தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment